
மதபோதகர் மீது தாக்குதல் :
Madras High Court on Tamil Nadu Police : திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவர், 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ அலுவலகத்திற்குள் வைத்து தாக்கப்பட்டார்(Church Father Attack). இது தொடர்பாக திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என காட்ஃப்ரே வாஷிங்டன் நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு :
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் எம்.பி ஞானதிரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஆறு மாதங்களாக வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு ஆய்வாளர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். "வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரில் ஆஜராக உத்தரவு :
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் எம்.பி. உள்ளிட்ட அனைவரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்,, இல்லாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆறு மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் :
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கி, ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், பெரும்பாலான வழக்குகளின் விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம். காவல் துறையினரின் மெத்தனப் போக்கால் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று வருத்தம் தெரிவித்தார்.
====