
தனியார் மயமாகும் தூய்மை பணிகள் :
Madras High Court on Chennai Corporation : சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் அருகே, 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட ஏழு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு :
இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்(Chennai High Court) வழக்கு தொடரப்பட்டது.
ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பில்லை :
அந்த மனுவில், "இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2,042 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், 1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப் படுவார்கள் என்றும் கூறப்பட்டாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவகாசம் கோரிய அரசு :
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மனுதாரர் தரப்பில், "2,000 பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
மேலும் படிக்க : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
13ம் தேதி மீண்டும் விசாரணை :
தொழிலாளர்கள் முழுமையாக பாதுகாப்பாக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, பதில் மனு தயார் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
===