
13வது நாளாக போராட்டம் :
Madras High Court on Sanitation Workers Protest : சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 13வது நாளாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை(Ripon Building) வெளியே அவர்களின் போராட்டம் தொடர்கிறது.
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பல்வேறு அரசியல் கட்சிகள், அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அங்கிருந்து காலி காலி செய்யும்படி காவல்துறையினர் அனுப்பிய நோட்டீசை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வாதம் :
மனுதாரர் தரப்பில், போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை என்றும் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், போராட்டத்தை கைவிட்டு, காலி செய்யக் கூறி உத்தரவு பிறப்பித்தும், தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகிறார்கள், என்று தெரிவிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்கள் வாதம் :
தூய்மை பணியாளர்கள் தரப்பில், போராட்டம் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இன்னும் இரண்டு ஒரு நாட்களில் இந்த பிரச்சனைக்கு சமுக தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : Chennai Protest : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு :
வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனுமதி இன்றி நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது என்பதால் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அரசுக்கு முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம் எனவும் குறிப்பிட்டனர்.
=============