

கோவில், மடங்களின் சொத்துக்கள்
Madras High Court on HRCE Department : நாடு முழுவதும் கோவில்கள், மடங்களுக்கு சொந்தமாக பல கோடி மதிப்புள்ள நிதி மற்றும் நிலங்கள் சொந்தமாக உள்ளன. தமிழகத்தில் கோவில்களை நிர்வகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை தான். ஆனால், கோவில், மடங்களின் சொத்துக்கள் தொடர்பாக விவரங்கள் எதுவும் அறநிலையத்துறையின் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது கிடையாது.
கோவில் சொத்துக்கள் - நீதிமன்றத்தில் வழக்கு
இந்தநிலையில், கோவில்கள், மடங்கள், இந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்த அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள், அனுமதிக்கான உத்தரவு போன்றவற்றை, உடனுக்குடன் பொது வெளியில், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும். அதற்கு உரிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று, மயிலாப்பூரை சேர்ந்த 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளையின்(Indic Collective Trust) நிர்வாகி டி.ஆர்.ரமேஷ்(TR Ramesh) மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் விசாரணை
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், ''டெண்டர் விபரங்கள் அந்தந்த கோவிலின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. 'கோவில் சொத்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. அவற்றை கொண்டு 'சைபர்' மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது,'' என்று தெரிவித்தார்.
அறநிலையத்துக்கு தயக்கம் எதற்கு?
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, லட்சுமி நாராயணன், ” கோவில், மடங்களின் சொத்துக்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் அறநிலையத்துறைக்கு தயக்கம் ஏன்? என்றார். தகவல் அறியும் சட்ட பிரிவு 4ன் கீழ், அதிகாரிகள் தாமாக முன்வந்து சில தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பொது ஆவணங்கள் - தயங்குவது எதற்காக?
டெண்டர்கள், தணிக்கை ஆட்சேபனைகள், நில பதிவேடுகள், நிதி தொடர்பான அறிவிப்புகள், சட்டத்தின்படி பொது ஆவணங்கள் என்பதால், அவற்றை பதிவேற்றுவதில் என்ன தயக்கம் என்றும் நீதிபதி வினவினார்.
கோவில் சொத்துக்கள் - மக்களுக்கு தெரிய வேண்டும்
கோவில் சொத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தால் தான். புதிய சொத்துக்களை வாங்குவோர் அது தனியார் உடையதா? கோவிலுக்கு சொந்தமானதா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மனுதாரர் கோரியுள்ள விவரங்களில் தணிக்கை அறிக்கையும் அடங்கும். அவற்றை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அறநிலையத்துறை ஆணையரின் தனிப்பட்ட சொத்து விவரம் எதையும் மனுதாரர் கேட்கவில்லையே?
சைபர் குற்றங்கள் மீது பழிபோடுவதா?
சைபர் குற்றங்கள் நடக்காமல் இருக்கவும், அவற்றை தடுக்கவும், நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது, ஆவணங்களை பதிவேற்ற முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது.
மேலும் படிக்க : ’கோடிகளில்’ திமுக அரசின் ஊழல் - காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்
இணையத்தில் பதிவேற்றம் அவசியம்
அறநிலையத்துறையின் சட்டப் பிரிவு 29ன் படி, சொத்து விபரங்கள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து கோவில்களின் விபரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பணிகளை செய்ய போதுமான நிதி, உள்கட்டமைப்பு, அறநிலையத்துறையிடம் இல்லையா? என்றும் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அறநிலையத்துறைக்கு உத்தரவு
இதையடுத்து, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; பதிவேற்றம் செய்யாத தகவல்கள் என்ன என்பது குறித்து விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பதில் மனுவை முன்கூட்டியை மனுதாரருக்கு வழங்கும் நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.
======