
முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசோதனைகள் :
CM MK Stalin Health Condition Update : நடைப் பயிற்சியின் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு எடுப்பார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை :
இதையடுத்து, தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ சோதனையும் செய்யப்பட்டது. இந்தநிலையில், முதல்வருக்கு இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றதாக அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் தெரிவித்து இருந்தார். முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது பற்றி, மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கும் என்றும் அவர் கூறி இருந்தார்.
மேலும் படிக்க : முதல்வருக்கு ”ஆஞ்சியோ பரிசோதனை” : அமைச்சர் துரைமுருகன் தகவல்
இதய துடிப்பில் மாறுபாடுகள் :
இந்தநிலையில், முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. ” முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட மயக்கம் தொடர்பான அறிகுறிகளுக்காக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனைகளில், முதல்வருக்கு ஏற்பட்ட மயக்க அறிகுறிகள் இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாகவே நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
முதல்வர் நலமுடன் இருக்கிறார் :
இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், இன்று காலை இந்த இதயத் துடிப்பு மாறுபாடுகளை சரி செய்வதற்கான சிகிச்சை நடைமுறை முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை சீராக (MK Stalin Health Condition) இருந்தது தெரியவந்துள்ளது. முதல்வர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.