
பாலாற்றில் தடுப்பணைகள் :
Palar River Sand Smuggling Issue : வேலூர் வழியாக வரும் பாலாறு, பின்னர் வங்கக் கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே இந்த ஆண்டு 3 தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்(Duraimurugan) அறிவித்தார். அவரது செல்வாக்கில் வளம் கொழிக்கும் மணல் புள்ளிகள் தொடர்ந்து அதிகார தோரணையுடனே செயல்பட்டு வருகின்றனர். மணல் கடத்தல் தொடர்பாக இவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
கட்டுமானங்களுக்காக மணல் கடத்தல் :
பாலாற்றில் தடுப்பணையை கட்டத் தொடங்கியபோது ரெடிமிக்ஸ் ஆலையும் பாலாற்றின் கரையோரம் அமைக்கப்பட்டது. தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்காகத்தான் இந்த ஆலை என ஆரம்பத்தில் கிராம மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், ஆற்றின் கரையோரம் ஆலை அமைத்து, பிற இடங்களில் நடக்கும் கட்டுமானங்களுக்கு சட்ட விரோதமாக மணலைக் கடத்திய விஷயம் அம்பலமாகி உள்ளது.
மவுனம் காக்கும் காவல்துறை :
இதுபற்றி, கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, ஒரே பதிவெண் கொண்ட லாரிகள் மூலம் மணலைக் கடத்துவதை வீடியோ எடுத்த கிராமத்தினர் அதை சமூகவலைதளத்தில் வைரலாக்கினர். இனி வேறு வழியில்லை என்பதால், நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, மணல் கடத்தலுக்கு(Palar River Sand Theft) பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.
குழியில் விழுந்து 3 பேர் பலி :
ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மணல் திருட்டும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மணல் கடத்தலுக்காக பாலாற்றுக்குள் தோண்டப்பட்ட குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி மூன்று பேர் பலியாகி இருக்கிறார்கள். அதன் பிறகும் இந்த அவலத்தைத் தடுக்க எந்த அதிகாரியும் பதறியோடி வந்ததாகத் தெரியவில்லை.
மேலும் படிக்க : நீரின்றி காயும் ’கடைமடை விவசாயம்’ : காவிரி கரைபுரண்டும் அவலம்
அமைச்சருக்கு பயந்து நடவடிக்கை தவிர்ப்பா? :
தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி ஆற்று மணலை சுரண்டி விற்றுக் காசு பார்க்கும் கும்பல் மீது அமைச்சருக்குப் பயந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக காட்பாடி பகுதி மக்கள்(Katpadi) குற்றம் சாட்டுகின்றனர் இதற்கு தீர்வு என்ன என்பதை ஆளுங் கட்சியான திமுகதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
=====