
பாமகவில் ராமதாஸ் vs அன்புமணி மோதல் :
Anbumani vs Ramadoss Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையேயான மோதல், ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல தான் தெரிகிறது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், நியமனம், தனித்தனியே ஆலோசனை, பொதுக்குழு என நடத்தி சில மாதங்களாக தமிழக அரசியலை பேசுபொருளாக இருந்தனர்.
யார் கையில் பாமக? முற்றிய மோதல் :
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் அனுப்பிய ராமதாஸ், அதற்கு எந்த பதிலும் இல்லாததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். தானே உண்மையான பாமக தலைவர் என்றும், இதற்கு யாரும் உரிமை கோர முடியாது, அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி தரப்பு, நிறுவனருக்கு அதிகாரம் இல்லை என்றும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் மல்லுக்கட்டியது.
அன்புமணி தான் தலைவர் :
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தரப்பை சேர்ந்த பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு, ”அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. அவரிடம் தான் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை உள்ளதாக கூறினார்.
அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் :
இரண்டு தரப்பும் பொதுக்குழு தீர்மானங்களை அனுப்பி இருந்தாலும், அன்புமணி அனுப்பியதையே தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
தி.நகர் பாமக அலுவலகத்தை கட்சியின் அலுவலகமாகவும், தலைவராக அன்புமணியையும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனையும், பொருளாளராக திலகபாமாவையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
ராமதாசுக்கு பின்னடைவு? :
கட்சியின் கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றையும் அன்புமணி தான் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக” பாலு விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தையும் அவர் காண்பித்தார்.பாமக நிறுவனராக ராமதாஸ் தொடரலாம் எனவும், அன்புமணி தரப்பில் இருப்பவர்கள் மட்டுமே கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அவர் பக்கம் இருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் பாலு கூறினார்.
மேலும் படிக்க : PMK Ramadoss vs Anbumani : யார் கை ஓங்கும்? சோர்வடையும் தொண்டர்கள்
சட்டப் போராட்டம் நடத்துவாரா ராமதாஸ் :
தேர்தல் ஆணையத்தின் முடிவு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என ராமதாஸ் தரப்பு மிகவும் நம்பி இருந்த நிலையில், தற்போது அதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் முடிவு வந்திருக்கிறது. இதன்மூலம் ராமதாசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவே, பாமகவினர் கருதுகின்றனர். சட்ட ரீதியான போராட்டங்களை மட்டுமே இனி அவர் முன்னெடுக்க முடியும். அது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையில் தான் இருக்கிறது.
=======