
ராமதாஸ் vs அன்புமணி முடிவுக்கு வராத மோதல் :
Ramadoss vs Anbumani Issue Update : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் சமரசத்திற்கு வரவே முடியாத அளவுக்கு முற்றிக் கிடக்கிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, தேர்தல் ஆணைய கதவையும் தட்டி இருக்கிறார்கள். அன்புமணியின் தலைவர் பதவி காலாவதியாகி விட்டதாக ராமதாசும், கட்சியின் தலைவர் தான்தான், அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாக அன்புமணியும் மல்லுக் கட்டுகிறார்கள். இதனால், பாதிக்கப்பட்டு சோர்வடைந்து கிடப்பது நிர்வாகிகளும், தொண்டர்களும்தான்.
அன்புமணி மீது குற்றச்சாட்டு :
தனது தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அதன்பிறகு நடைபெற்ற நிர்வாக குழுவில் ஆலோசனை நடத்தினார். அன்புமணி பதிலளிக்க ஆகஸ்டு 31வரை அவகாசம் வழங்கினார். ஆனால் அன்புமணி தரப்பில் பதில் ஏதும் தரப்படாததால், 48 மணி நேரம் அதாவது இன்று வரை அவகாசம் வழங்கினார்.
பாமக நிர்வாக குழுக் ட்டம் :
இந்தநிலையில், பாமக நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், “ அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக கூறினார்.
செப்.10 வரை அன்புமணிக்கு கெடு :
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்க வேண்டும். அன்புமணி பதில் அளிக்காவிட்டால் கட்சி விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்முறையாக அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை” இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
மேலும் படிக்க : அன்புமணிக்கு 48 மணி நேரம் கெடு: செப்.3ல் ராமதாஸ் ’முக்கிய முடிவு’
அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, “ போகப் போகத் தெரியும்” என்ற பாடலை பாடினார் ராமதாஸ்.
=======