
பாமகவில் நீடிக்கும் குழப்பம் :
PMK MLA Arul on Anbumani Ramadoss Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து, மக்களை சந்தித்து வருகின்றன. ஆனால் பாட்டாளி மக்கள் யாருக்கு அதிகாரம், யார் சொல்வதை கேட்டு செயல்படுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அன்புமணி நடைப் பயணம் மேற்கொண்டு வந்தாலும், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே யாரை எதிர்ப்பது? யார் தலைமையை ஏற்பது? என்பதில் தயக்கம் நிலவி வருகிறது.
ராமதாஸ் - அன்புமணி மோதல் :
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி, அவரது ஆதரவாளர்கள்ளை நீக்கி, புதிய நிர்வாக குழுவை அமைத்தார். தனது மகளுக்கு அதில் வாய்ப்பு வழங்கி, அன்புமணிக்கு செக் வைத்தார். மேலும், பொதுக்குழுவை கூட்டி, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை வாசித்து, விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பினார். பின்னர் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் பதிலளிக்க கெடுவும் விதித்து இருந்தார் ராமதாஸ்.
தனியாக பொதுக்குழுவை நடத்திய அன்புமணி, ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துவதாகவும், தான் தலைவர் என்றும் அறிவித்தார். தனது தலைமை தான் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் என்றும், ராமதாசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் அன்புமணி.
ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் :
அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஒழுங்கு நடவடிக்கை இன்று காலை கூடியது. அனுப்பப்பட்ட விளக்க நோட்டீசுக்கு அன்புமணி இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதுபற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க : விளக்கம் அளிக்க ஆக. 31வரை கெடு : அன்புமணியை நெருக்கும் ராமதாஸ்
அன்புமணிக்கு 48 மணி நேரம் கெடு :
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பாமக எம்எல்ஏ அருள்(PMK MLA Arul) செய்தியாளர்களை சந்தித்தார். ”அன்புமணியின் பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். செப்டம்பர் 3ம் தேதி நிர்வாகக் குழு கூட்டம்(PMK Meeting) மீண்டும் கூட்டப்பட இருக்கிறது. அன்றைய தினம் அன்புமணி குறித்து விவாதம் நடத்தலாம் அல்லது விவாதம் நடத்தாமலும் போகலாம்.
ராமதாஸ் கையில் இறுதிமுடிவு :
அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து அன்றைய தினம் ராமதாஸ் அறிவிப்பார். அவரது முடிவே இறுதி முடிவு. 2026ல் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி” இவ்வாறு எம்எல்ஏ அருள் தெரிவித்தார்.
====