
குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த செவிலியர்கள் :
Supreme Court Condemns DMK Government : அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். நிரந்தரமாக நியமித்தால், அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் குறைவான ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் :
நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி, செவிலியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 'சம வேலைக்கு; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எனவே,
அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு :
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத். சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. “சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, 2,000 நாட்களுக்கு மேல் ஆகிறது. அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறீர்கள்?' என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு மீது தமிழகம் புகார் :
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நர்ஸ்கள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் சார்ந்து இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ், 440 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது. அந்த நிதி கிடைத்தால் தான் எங்களால் நர்ஸ்களுக்கு முழு ஊதியங்களை வழங்க முடியும்' என்றார்.
மத்திய அரசை குறை சொல்லாதீங்க
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லாதீர்கள் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய நீதிபதிகள், நர்ஸ்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். உங்களுக்கு தேவைப்படுகிறது என்றால் நீங்களாகவே தனியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்தலாம். உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்குவது உங்கள் கடமை. அதை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது.
இலவசங்களுக்கு பணம் இருக்கிறதா? :
குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக நர்ஸ்களை நிரந்தர பணி நியமனம்(Contract Nurse Permanent Issue) செய்யாமல் உள்ளீர்கள். இலவசங்களை கொடுக்க மட்டும் உங்களுக்கு பணம் இருக்கிறது; ஆனால் செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க மட்டும் பணம் இல்லையா?
மேலும் படிக்க : ஒப்பந்த செவிலியர்களை சுரண்டுவதா? : தமிழக அரசுக்கு SC குட்டு
சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதை எங்களிடம் கூறுங்கள். தமிழக அரசு அனைத்திலும் வளர்ந்த மாநிலம், பொருளாதார ரீதியிலும் செல்வாக்கு மிக்க மாநிலமாம் எனச் சொல்கிறீர்கள்.ஆனால் சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மட்டும் மனம் இல்லையா என நீதிபதிகள் காட்டமாக வினவினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
=================