
’சிறுமி’ வழக்கில் முன்னேற்றமே இல்லை :
Tamilisai Soundararajan on DMK Government : சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” திருவள்ளூரில், பத்து வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாகி, ஒரு வாரம் கடந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும், கேள்வி கேட்பதால், அந்தச் சிறுமி பயந்து போயிருப்பதாக, அவரது தாயே கூறுகிறார். 'சிசிடிவி' காட்சிகள் தந்த பின்பும், ஒரு வாரம் கழித்து, இருவரை காட்டி, இவர்களாக இருக்கலாம் என்றுதான் காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதான், இன்றைய திமுக ஆட்சியின் நிலை.
வாக்குக்காக மக்களை ஏமாற்றுவதா? :
தமிழகத்தில் போராட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. நான்காண்டுகளாக, எதையுமே செய்யாமல், தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' என, மக்களிடம் செல்வது, வாக்கிற்காக மக்களை ஏமாற்றும் முயற்சி. தமிழகம் விடுதலை பெறவே பாஜக-அதிமுக கூட்டணி சேர்ந்து இருக்கிறது. அதற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.
மேலும் அடிக்க : கம்யூனிஸ்டுகளுக்கு தேவை உண்டியல்கள் அல்ல, பெரிய பெட்டிகள் - தமிழிசை சௌந்தரராஜன்
திமுக கூட்டணியில் முரணான கருத்துகள் :
திமுக அணியில் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவாறு பேசுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராகுலை எதிர்க்கிறது. திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜரையே விமர்சிக்கிறார். திமுக வாக்குகளில் 25 சதவீதம் தங்களுடையது என்கிறார் திருமாவளவன். இப்படி ஆள் ஆளுக்கு பேசுவதால், அந்தக் கூட்டணி முரண்பட்டு நிற்பது தெரிய வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கு பயம் :
தமிழகத்தில், இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. ஆனால், அதை செய்ய பயப்படும் திமுக, பொறுப்பை தட்டிக் கழித்து, மத்திய அரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறது” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
===