
“தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்”
BJP Leader Nainar Nagendran Election Campaign Tour : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது தமிழக சுற்றுப் பயணத்தை “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் இன்று தொடங்குகிறார். மதுரையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இந்த பிரசார பயணம் ஆரம்பமாகிறது. திமுகவின் மோசமான ஆட்சி, நிறைவேற்றப்படாத திட்டங்கள், சிறப்பான கூட்டணியோடு திமுகவை வீழ்த்துதல், சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுதல் உள்ளிட்ட இலட்சியங்களுடன் மதுரையில் தொடங்கும் இந்த இலட்சிய பயணம் நவம்பர் 22ம் தேதி தூத்துக்குடியில் நிறைவு பெறுகிறது.
அரசியல் கட்சிகள் மும்முரம்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய் ஆகியோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்கள். திமுக சார்பில் அரசு விழாக்கள் மூலம் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம்
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் மக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அக்கட்சியின் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், தனது தமிழக சுற்றுப் பயணத்தை மதுரையில் இன்று துவங்குகிறார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இந்த பரப்புரை பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
திமுகவை அம்பலப்படுத்துவது
நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தின் முக்கிய நோக்கம், திமுகவின் உண்மை முகத்தை தமிழக மக்களிடையே அம்பலப்படுத்துவது, டாஸ்மாக்கால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், மோசமான சட்டம் ஒழுங்குநிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி பிரசாரம் அமையும்.
திமுகவின் தோல்விகளை பட்டியலிடுவது
இதேபோன்று, 2021 தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவற்றை பட்டியலிடுவது, மக்கள் நலனை புறக்கணிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள், திமுகவின் முதல் குடும்பத்தின் ஆதிக்கம், தமிழகத்தை அவர்கள் தங்கள் சொத்தாக கருதுதல் பணியாற்றுவது போன்றவை பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் நயினார் நாகேந்திரன் அவர்களின் பயணம் அமையும்.
தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் பெருமை சேர்த்தல், 8 கோடி தமிழர்களை அணுகி, அவர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக குரல் கொடுப்பது, பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தி, வரவிருக்கும் தேர்தலுக்கு அவர்களை தயார்படுத்துதல், மாநிலம் முழுவதும் பாஜகவின் வாக்குச்சாவடி அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம் இருக்கும்.
10,000 தெருமுனைக் கூட்டங்கள்
நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளும் யாத்திரை, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடையும். ஜனவரி 2026 வரை இந்த யாத்திரை நீடிக்கும். மாநிலம் முழுவதும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில், 10,000க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும்.
மேலும் படிக்க : உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்த நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தை மீட்டெடுக்கும் பயணம்
முக்கியமான குழுக்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். பிரசாரத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது வெறும் யாத்திரை கிடையாது. திராவிட மாதிரியின் பிடியிலிருந்து கண்ணியம், பாதுகாப்பு மற்றும் பெருமையை மீட்டெடுப்பதற்கான மக்கள் பயணமாக இருக்கும். இதன்மூலம் தமிழ்நாட்டின் பெருமை மீட்டெடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவிற்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்டமன்ற தேர்தலில் புதிய வரலாறு படைக்கும் பயணமாக இது அமையும்.
=============