

தவெக தலைவர் விஜய் பிரசாரம்
TVK Vijay Election Campaign in Salem Date Update in Tamil : கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய விஜய் மாநாடு, பிரமாண்ட பொதுக்கூட்டம் என தனது வலிமையை நிருபித்தார். பின்னர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் திருச்சி, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
மக்கள் சந்திப்பு பயணம்
மத்திய பாஜக அரசையும், மாநிலத்தில் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து அவர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது திரண்ட கூட்டம், ஆட்சியாளர்களை மிரளச் செய்தது. செப்டம்பர் 27ம் தேதி கரூரில், விஜய் பிரசாரம்(TVK Vijay Karur Rally Stampede) செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர் சம்பவம் - பயணம் நிறுத்திவைப்பு
இதையடுத்து,தவெகவின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. எஸ்ஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தவெக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்காத நிலையில், அதற்கு முன்னதாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார்.
சிறப்பு பொதுக்குழு கூட்டம்
ஒருமாத இடைவெளிக்கு பிறகு மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், விஜய் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
சேலத்தில் விஜய் பரப்புரை
அடுத்தகட்டமாக சேலத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் சார்பில் சேலத்தில் டிசம்பர் மாதம்(TVK Vijay Manadu in Salem on December 4, 2025) நான்காம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தற்போது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்கள் - மனு
கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை வழங்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது.
வாரம் 2 நாட்கள் பிரசாரம்
ஒரு வாரத்தில் 2 நாட்கள், 2 மாவட்டங்களுக்கு விஜய் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை வார இறுதி நாளான சனிக்கிழமை மட்டும் விஜயின் மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை வார நாட்களில் சந்திப்பை தொடங்கவுள்ளனர். அதன்படி வியாழக்கிழமை சேலத்தில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
=====