
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது :
TVK Vijay Condemns DMK on Sanitation Workers Arrest : பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்க மறுத்த திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி நேற்றிரவு அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அராஜக முறையில் கைது செய்வதா?
தூய்மை பணியாளர்கள் கைது(Sanitation Workers Arrest) குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
பெண் பணியாளர்கள் மயக்கம் :
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது.
காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் தேச விரோதிகளா? :
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?
திமுக அரசுக்கு மனசாட்சி இருக்கிறதா? :
ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
வாக்குறுதியை காற்றில் விட்ட திமுக :
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி(Sanitation Workers Protest) வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
மேலும் படிக்க : "தூய்மை பணியாளர்" வாழ்வை நாசமாக்கும் நடவடிக்கை : விஜய் கண்டனம்
தூய்மை பணியாளர்களை விடுவியுங்கள் :
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய்(TVK Vijay Tweet) வலியுறுத்தி உள்ளார்.
==================