
முழு வீச்சில் களமிறங்கிய விஜய் :
TVK Vijay Election Campaign Tour in Trichy : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய விஜய், 2026ல் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் களமிறங்கி இருக்கிறார். பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்து அரசியலை முன்னெடுத்து வருகிறார் விஜய். விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி பெருங் கூட்டத்தை திரட்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்த விஜய், கடந்த மாதம் மதுரையில் 2வது மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தினார்.
தவெக தொண்டர்கள் - ஸ்தம்பித்தது திருச்சி :
இந்தநிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மக்களை சந்திக்கும் சுற்றுப் பயண பிரசாரத்தை இன்று அவர் தொடங்கி இருக்கிறார்(Vijay Campaign). இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, காவல்துறையினரின் 23 நிபந்தனைகளுடன் திருச்சியில் அவர் பிரசாரம் செய்கிறார். இதற்காக பிரத்யேகமாக பிரசார வாகனமும் வடிவமைக்கப்பட்டது. அரசியல் சுற்றுப் பயணத்திற்காக இன்று காலை விஜய் திருச்சி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக பெருங்கூட்டம் திரண்டது. திருச்சி விமான நிலைய வளாகம் வெளிப்புறத்தில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர்.
காத்திருக்கும் தொண்டர்கள், குலுங்கியது திருச்சி :
விமான நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு விஜய் வரவே, ஒன்றரை மணி நேரம் ஆனது. அவர் பயணிக்கும் சாலை வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு இருந்தனர். இது பல்லாயிரக் கணக்காக பெருகிய நிலையில், பலமணி நேரம் தொண்டர்கள் காத்திருந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாநாடு போல நடைபெறும் பிரசாரம் :
காவல்துறை அறிவுறுத்தலின்படி பிரசார வாகனத்தில் இருந்தவாறே தொண்டர்களை வாழ்த்துக்களை ஏற்றார் விஜய். பிரசார பயணம் மாநாடு போல மாறியது தமிழக அரசியல் கட்சிகளை அச்சம் கொள்ள வைத்து இருக்கிறது. விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்ல முடியாமல் மக்கள் தவிக்க, திருச்சி மாநகரமே ஸ்தம்பித்தது.
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய் :
முதல் பிரசாரம் நடைபெற இருக்கும் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல நான்கு மணி நேரம் பிடித்தது. மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே நடைபெறும் கூட்டத்தில் பேசிய பிறகு, காரில் செல்லும் விஜய், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அரியலூர் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் அங்கிருந்து கல்லங்குறிச்சி பிரிவு சாலை புறவழிச்சாலை ரவுண்டானா, செந்துறை ரோடு புறவழிச்சாலை ரவுண்டானா வழியாக பெரம்பலூர் செல்கிறார்.
குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியை தொடர்ந்து பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் உள்ள மேற்கு வானொலி திடலில் மக்களை சந்திக்கும் அவர், பின்னர் திருச்சி வந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார். திருச்சி திருப்புமுனை என்பது மற்ற அரசியல் கட்சிகளை போலவே, விஜய்க்கும் சாதனை பிரசாரமாக அமைய இருக்கிறது.
மேலும் படிக்க : TVK : ‘உங்க விஜய் நா வரேன்’ : நாளை பிரசாரம், லோகோ வெளியீடு
சனிக்கிழமை தோறும் பிரசாரம் :
ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ள விஜய்(Vijay Next Campaign Date), அடுத்த வாரம் (20ம் தேதி) சனிக்கிழமை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் மக்களை சந்திக்கிறார்.