
இஸ்ரேல் - ஹமாஸ் போர் :
Donald Trump on Israel Hamas War Ceasefire : மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதி வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து வருகிறது. அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், பால், பிரட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
டிரம்ப் - நெதன்யாகு பேச்சு :
காசாவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வந்தார். அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பாக காசா போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
போர் நிறுத்தம், இஸ்ரேல் ஒப்புதல் :
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்கா முன் வைத்த விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார். இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் அதிபர் டிரம்ப். போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
காசாவில் அமைதி அவசியம் :
”காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி. ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும். காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் அமெரிக்கா மிக மிக அருகில் வந்துவிட்டது.
காசாவை இஸ்ரேல் இணைக்காது :
அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள். இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இறந்த பிணைக் கைதிகளின் உடல்கள் தாமதமின்றி திருப்பி அனுப்பப்படும். போர் உடனடியாக முடிவுக்கு வரும்” இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் போர் நிறுத்தம் ஒப்பந்தம் - முக்கிய அம்சங்கள் :
1. ஹமாஸ் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தால், படிப்படியாக இஸ்ரேல் படையினர் காசாவில் இருந்து வெளியேறுவார்கள்.
2. அமைதியை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்காலிக சர்வதேச படை காசாவில் நிறுத்தப்படும்.
3. ஹமாஸ் படையினர் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
4. இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்.
பெஞ்சமின் நெதன்யாகு பேட்டி :
போர் நிறுத்தம் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப் திட்டம் எங்கள் போர் நோக்கங்களை அடைகிறது. இது எங்கள் அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பக் கொண்டு வரும், ஹமாஸின் ராணுவத் திறன்களை அகற்றும்.
காசாவில் அச்சுறுத்தல் இருக்காது :
ஹமாஸ் அமைப்பின் அரசியல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது இரு நாடுகளும் தோளோடு தோள் நிற்கும்போது. சாத்தியமற்றதை நாங்கள் சாத்தியமாக்குகிறோம். ஹமாஸ் படை நிராயுதபாணியாக்கப்படும். காசா ராணுவ மயமாக்கப்படும். இஸ்ரேல் எதிர்காலத்தில் பாதுகாப்புப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்.
மேலும் படிக்க : ட்ரம்ப் பரிந்துரைத்த போர் ஒப்பந்தம் : இஸ்ரேல், ஈரான் ஏற்பு
உங்கள் (டிரம்ப்) திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால், முதல் கட்டமாக, படைகளை திரும்பப் பெறுவோம். அதைத் தொடர்ந்து 72 மணி நேரத்திற்குள் எங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
=============