
இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை :
Gaza Food Problem : போரால் பாதிக்கப்பட்ட மோசமான நகரமாக மாறி இருக்கிறது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்தி ஹமாஸ் அமைப்பு போராடி வருகிறது. இவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை 21 மாதங்களாக நீடிக்கிறது.
உருக்குலைந்து போயிருக்கும் காசா :
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால்(Israel Gaza War), ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை போல, உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது காசா நகரம், தகர்ந்து போன கட்டிட குவியல்கள், சாலைகளில் பரிதவிக்கும் மக்கள், உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி தவிக்கும் அப்பாவி மக்கள் என நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
உணவுப் பஞ்சத்தின் கொடூரம் :
காசாவில் உணவுப் பஞ்சத்தால்(Gaza Food Problem) ஏற்பட்டுள்ள தீவிரத்தை உலகுக்கு உணர்த்தும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காசா பகுதியில் மட்டும் 48 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் படைகளின் தொடர் முற்றுகையால் காசா பகுதி உலகின் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டு, உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி இருக்கிறது.
நிவாரணப் பொருட்களுக்கும் கட்டுப்பாடு :
உலக நாடுகளின் உதவிப் பொருட்களைக் குறைந்த அளவிலேயே காசாவுக்குள் இஸ்ரேல்(Israel Gaza Food) அனுமதித்து வருகிறது. நாளொன்றுக்கு 600 டிரக்குகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் சூழலில் 5 டிரக்குகள் மட்டுமே காசா நகருக்குள் அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு வேளை உணவுக்கே மக்கள் போராடுகின்றனர்.
பட்டினியால் உயிரிழப்பு அதிகரிப்பு :
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் தினமும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். ஆனால், 5 அல்லது 10 பேர் மட்டுமே பலியாவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 110 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். பட்டினிச் சாவால் இறந்தவர்களில் 80 பேர் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 லட்சம் குழந்தைகள், பெண்கள் பாதிப்பு :
காசா நகரில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளும், பெண்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பல நாட்கள் சாப்பிடாமல் உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
பால் கிடைக்காமல் குழந்தைகள் பரிதவிப்பு :
குறிப்பாக குழந்தைகள் பால் கிடைக்காமல் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாகவே பச்சிளங் குழந்தைகள் பலியாவது அதிகரித்து வருவதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்து இருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்து, காசா மக்கள் தொகையில் பெரும் பகுதியில் உயிரிழந்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====