
ரஷ்யா - உக்ரைன் போர் :
Donald Trump on Russia Ukraine War : ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டிற்கும் மேலாக நீடிக்கிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்ட நிலையிலும், இருவரும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாத போக்குடன் செயல்படுகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விட்டுக் கொடுக்க முன் வந்தாலும், போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் தயாராக இல்லை. உலக நாடுகளின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன.
போரை நிறுத்த ட்ரம்ப் முயற்சி :
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த(Russia Ukraine War Ceasefire) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முன்னெடுப்புகள் பலிக்காததால் கடுப்பில் உள்ள ட்ரம்ப், சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஒருமாத காலத்திற்குள் உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்து இருந்தார்.
ரஷ்யாவுக்கு 12 நாட்கள் கெடு :
இப்போது அந்த காலத்தை 12 நாட்களாக குறைத்து இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென புதினுக்கு, ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். “இனியும் காத்திருப்பதில் பலனில்லை. போர் நிறுத்தம் சார்ந்த முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை. புதின் இது குறித்த முடிவை எடுக்க வேண்டும். மக்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். புதினின் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது, அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யா மீது தீவிர வரிவிதிப்பு :
“ரஷ்ய மக்களை நான் நேசிக்கிறேன். அதனால் கூடுதல் வரி விதிப்பது குறித்து யோசிக்கிறேன். அதை ரஷ்யாவோடு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. போர் நிறுத்தம் நடக்கா விட்டால், தீவிர வரி விதிப்பை தவிர வேறு வழியில்லை” எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் ரஷ்யாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கருதுகிறார்.
=====