
சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் :
Tharman Shanmugaratnam on Singapore Tamil Encyclopedia : கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டிய தமிழர்கள், பல்வேறு நாடுகளில் குடியேறி, பாரம்பரிய பெருமைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூரில் கால்பதித்த தமிழர்கள், இன்று வரை அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் வரலாற்றை ஆணவப்படுத்தும் வகையில், ’ சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்’(Singapore Tamilar Kalai Kalanjiyam) என்ற ஆவணப் பெட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.
தமிழர் வாழ்வியலை பேசும் ஆவணம் :
200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ்(Singapore Tamil) மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. இதை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ”தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறினார். பண்பாட்டை பேணும் உறைவிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும்.
தனித்துவம் மிக்க சிங்கப்பூர் :
பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்டும். இதுவே உலகளாவிய இந்திய சமூகத்துக்கு மத்தியில் சிங்கப்பூர் தமிழர்களையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் தனித்துவமிக்கவர்களாகத் திகழச் செய்யும்’’ என்றார்.
சிங்கப்பூரின் முதல் தகவல் களஞ்சியம் :
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின் நூல், நாட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவான முதல் கலைக்களஞ்சியம் என்ற சிறப்பினை பெற்று இருக்கிறது. ஏறத்தாழ 375 பகுதிகளில் பல்வேறு தகவல்களை விவரிக்கும் துல்லியமான பதிவுகள் தகுந்த ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் தேசிய நூலக வாரியத்தின்(National Library Board) மின்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
எதிர்கால சந்ததியினருக்கான கருவூலம் :
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின்(Centre for Singapore Tamil Culture) தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான அருண் மகிழ்நன் பேசும்போது, ‘‘இந்த மின் நூல் மக்களைப் பற்றி மக்களால் உருவாக்கப்பட்ட தேர். இந்த அருஞ்செல்வம் உருப்பெற உதவி புரிந்தோருக்கு நன்றி. இதனை வாழும் களஞ்சியமாக நிலைக்கச் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
தேசிய நூலக வாரிய தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநருமான அழகிய பாண்டியன் மேலும் கூறும்போது, ‘‘இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான மூன்று ஆண்டுப் பயணம் சுவாரசியமானது. எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு கருவூலத்தை உருவாக்குவதில் பங்காற்ற கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்றார்.
மேலும் படிக்க : சிங்கப்பூர் அருகே புதிய நாடு : இந்திய வம்சாவழி தொழிலதிபர் முயற்சி
=====