
டிரம்பின் வர்த்தக போர் :
US Economist Steve Henke on Donald Trump : இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை நடத்தி வருகிறார். இதனால், அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொருட்களுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்கும் அமெரிக்காவும், வரி விதிப்பினால், என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் அந்தந்த நாடுகளில் உள்ள தங்கள் கிளைகளுக்கு பொருட்கள் கொள்முதலை நிறுத்தி விடுமாறு அறிவுறுத்தி வருகின்றன.
தள்ளாட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம் :
ஒருபக்கம் டிரம்பின் வரி விதிப்பால்(Donald Trump Tariffs on India), பல்வேறு நாடுகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும் நிலையில், அமெரிக்க பொருளாதாரம் என்னவாகும் என்ற கவலையும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து கவலை அடைந்துள்ள அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள், அதிபர் டிரம்பை எச்சரித்து இருக்கிறார்கள்.
அழிவுப் பாதையில் டிரம்ப் :
வர்த்தக போர் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கே ( Steve Hanke ), இதன்மூலம் அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என விமர்சித்தார். ஸ்டீவ் ஹென்கேவின் இந்த விமர்சனம், வர்த்தக போர் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது.
ஸ்டீவ் ஹென்கே கருத்து :
டிரம்ப்பின் அறிவிப்பு முற்றிலும் தவறானது. தன்னைத் தானே அழித்துக் கொண்டு எதிரியுடன் ஒருபோதும் மோதக்கூடாது என்பதுதான் மாவீரன் நெப்போலியனின் அறிவுரை. எனவே, வரி விதிப்பு விஷயத்தில், நெப்போலியனின் ஆலோசனையை டிரம்ப் பின்பற்ற வேண்டும். அப்படி செய்யா விட்டால் அவர் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.
மேலும் பார்க்க : இந்தியாவுடனான நல்லுறவை கெடுக்காதீங்க! : டிரம்பை எச்சரித்த செனட்டர்
வரிவிதிப்பு முட்டாள்தனம் :
பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் டிரம்பின் நடவடிக்கைகள் நிலைகுலைந்து விடும். பொருளாதாரத்தை உயர்த்துவது என்ற பெயரில் வரிவிதிப்பு என்பது முட்டாள்தனமான முடிவு” இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.
======