லாலு கோட்டையை தகர்க்கும் பி.கே. : களைகட்டும் பீகார் தேர்தல்
பீகாரில் மும்முனைப் போட்டி :
Prashant Kishor Election Campaign : பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரு பக்கம் நிதிஷ்குமார்- பாஜக கூட்டணி, மறுபுறம் காங்கிரஸ் லாலு யாதவ் கூட்டணி இருக்கிறது. இது மட்டுமின்றி பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனியாக போட்டியிடுகிறார். அவரது கட்சியான ஜன் சுராஜ் (Jan Suraaj) அனைத்து தொகுதிகளிலும் களம் காண இருக்கிறது. இதன் காரணமாக பீகார் தேர்தல் மும்முனை போட்டி உறுதியாகி விட்டது.
செல்வாக்கை காட்டிய பிரசாந்த் கிஷோர் :
தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள பிரசாந்த் கிஷோர்(Prashant Kishor), பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், சீதாமர்ஹி பகுதியில் அவர் நடத்திய பேரணி மற்ற கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. இந்த நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டது அனைத்து கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்து இருக்கிறது. சீதாமர்ஹி என்பது ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின்(Lalu Prasand Yadav) கோட்டை. அப்படி இருக்கையில், அவரது கட்சி வாக்குகளுக்கே பிரசாந்த் கிஷோர் வேட்டு வைத்து விடுவாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க : பீகார் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க : ராகுலுக்கு பி.கே. அறிவுரை
அரசியல் கட்சிகளால் மக்களுக்கு பயனில்லை :
பொதுக்கூட்டங்களில் அனைத்து கட்சிகளையும் சாடும் அவர், "எனது தாத்தா இதே பீகாரில் மாட்டு வண்டி ஓட்டினார். நான் ஒரு அரசுப் பள்ளியில் படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். சுமார் 15 ஆண்டுகளில், நான் எந்தக் கட்சிக்கு ஆலோசனை வழங்கினேனோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர். யாரும் வளர்ச்சியைத் தரவில்லை. 15 ஆண்டுகள் ஏழைத் தாயின் மகனான லாலு யாதவை முதலமைச்சர் ஆக்கினீர்கள். ஆனால் உங்களின் எதிர்காலம் அப்படியேதான் இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை :
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் இளைஞர்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை மனதில் நினைத்து வாக்களிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வாக்களியுங்கள்” இவ்வாறு பிரசாந்த் கிஷோர்(Prashant Kishor) பிரசாரம் செய்தார்.