
தந்தை, மகன் மோதல், நீடிக்கும் குழப்பம் :
PMK Leader Ramadoss in PMK Magalir Manadu : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் சண்டை ஓய்ந்தபாடில்லை. யார் கையில் கட்சி என்பதில் இருவரும் போட்டி போட்டி செயல்பட்டு வருகின்றனர். இதில் நொந்து போயிருப்பது நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அன்புமணி(Anbumani) அனைவரும் எதிர்பார்க்கும் வலிமையான கூட்டணி அமையும் என்றார்.
பாமக மகளிர் மாநாடு :
இந்தநிலையில் பூம்பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு(PMK Magalir Manadu) ராமதாஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. தலைமை வகித்து பேசிய ராமதாஸ்(Ramadoss Speech), “ மாவீரன் குருவை எனது மூத்த மகன் என்று கூறுவேன். அவர் உயிருடன் இருந்தால் எப்படி மாநாட்டை நடத்துவாரோ அதேபோல் இந்த மாநாட்டை நடத்தி உள்ளீர்கள். பெண்களுக்கு பெருமை சேர்க்க இந்த மாநாடு, பெண்கள் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும். படிப்பில் பெண்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள், ஆண்கள் பின்னால் தான் உள்ளனர். இதேபோல் தொழில் செய்வதிலும் பெண்கள் தான் முதன்மையாக உள்ளனர். பெண்கள் அனைத்து விதத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். இந்த இரண்டு தீமைகளை, உங்கள் தெருவில் யார் விற்றாலும் பெண்கள், அவர்களை பிடித்து போலீசில் ஒப்படையுங்கள்.
தந்தையை தனயன் மிஞ்ச கூடாது :
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி(Narendra Modi) பங்கேற்றிருந்தார். அப்போது அவர் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பதற்காக சிறு உதாரணத்தை கூறியிருந்தார். இது மிகச்சரியான வார்த்தை. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமை குன்றிவிடக் கூடாது என்பதற்காக தனயனான ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை பெரிய கோயிலை விட உயரம் குறைவாக கோயிலை கட்டியிருந்தார்.
நானே கூட்டணியை அமைப்பேன் :
2026ல் வெற்றி கூட்டணி அமைக்கப்படும். அமைப்பேன்... அமைப்பேன்.... அமைப்பேன். மூன்று முறை இதை உறுதியாக கூறுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காதீர்கள். நான் சொல்வதுதான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும். உடனடியாக செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது :
10.5 சதவீதத்துக்காக தமிழகமே அதிரும் வகையில் பல போராட்டங்கள் செய்யப்பட்டது. அதையும் தாண்டி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படிப்பட்ட போராட்டத்தை செய்தால் தமிழ்நாடு தாங்காது. அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உணர்வோம். எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என நீங்கள் அறிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
17ம் தேதி கூட்டணி முடிவு :
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்(Ramadoss on PMK Alliance), 17ம்தேதி தனது தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தீர்மானிப்போம். பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு செய்வோம். இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.
====